Wednesday 10 July 2013

அமைதிக்கு பெயர்தான் "சாந்தி"!

அமைதி!
இதைதான் இன்று அனைவரும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
தனி மனிதன் முதல் சமூகம் வரை, தெரு முதல் நாடுவரை, உலகின் அனைத்தும் இந்த அமைதியைத் தேடித்தான் அலைந்துகொண்டிருக்கின்றன. அமைதியை நிலைநாட்டுகின்றோம் என்று மார்தட்டிக்கொள்பவர்கள் செய்வது யாவும் கலவரங்களும் மோதல்களுமே!

உலக நாடுகளில் அமைதி, மனித உரிமைகள், அணு ஆயுதத்தடுப்பு என்று வாய் கிழிய  பேசக்கூடிய நாடுகள்தான் உலக அளவில் ஆயுத விற்பனை செய்வதில் முதலிடத்தில்   உள்ளன.     அடுத்தவரின்  அமைதியைக்  கெடுப்பவர்கள்,   தாம் மட்டும்   அமைதியாக   இருக்க வேண்டும்   என   விரும்புகின்றனர்.     ஏன் இந்த முரண்பாடு?  

மனித சமூகம் விரும்பிய அமைதி கிடைத்ததா?
இன்று பெருகிவிட்ட தற்கொலைகளுக்கும் மனநோய்களுக்கும் முக்கிய காரணம் இந்த அமைதியின்மையேதான்.  மனநோய்களும் தற்கொலைகளும்  மட்டுமல்ல, உடல் நோய்களும் கொலை கொள்ளைகளும் ஏற்பட இந்த அமைதியின்மையே கா'ரணமாக' உள்ளது.  இன்று திருமண முறிவுகள் சாதாரணமாகிவிட்டன.  குழந்தைகளிடம் வன்முறை என்பது அதிகரித்துவிட்டது.  முதியோர் இல்லங்கள் தெருக்கு தெரு முளைத்துக்கொண்டிருக்கின்றன.

 “எவர் குருதியும் சிவப்பு தான்,  எவர் கண்ணீரும் உப்பு தான்” என்று அமைதியை பரப்பிய புத்தனின் வீட்டிலும் இன்று வெடிகுண்டுகள் வெடிக்கின்றன.
இந்தியாவில் அமைதியைக் குலைப்பதில் முன்னணியில் இருப்பது வகுப்புக் கலவரங்கள்தான்.  ஜாதி மதத்தின் பேரால் நமது நாட்டைப் போன்று உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இத்தனைக் கலவரங்கள் நிகழ்வதில்லை.   அணுகுண்டுகள், இரசாயன ஆயுதங்கள், நோய்களை பரப்பும் உயிரி ஆயுதங்கள் (biological weapons) ஆகியவற்றை வாங்க போட்டியிடும் நாடுகள் மற்றும் அவற்றை தயாரிக்கும் நாடுகளும் கூறிக்கொள்வது "அமைதிக்காகவே நாம் இவற்றை செய்கிறோம்". என்ன ஒரு முரண்பாடு?
இதுபோல இன்று தனிமனிதனும் வீடும் நாடும் "மெத்தை வாங்கி தூக்கத்தை இழந்து" அமைதியற்று தவிக்கின்றனர்.  இந்த அமைதியை பெற பிரார்த்தனை, யாகம், வேள்வி, தியானம், யோகா போன்ற வழிகளில் அமைதியைக் காண முயல்கின்றான்.  உலகப்பற்றை ஒழித்து தனிமையில் தவம் புரிந்தால் அமைதி கிட்டும் என்பது சிலருடைய நம்பிக்கை!  இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான ஆரவாரமற்ற இடங்களுக்குச் சென்று அமைதி பெறத் துடிக்கிறான்.   ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நகைச்சுவை மன்றங்களுக்கும் அமைதி நாடிச் செல்பவர் இருக்கின்றனர்.   இசை, ஆடல், பாடல் இவற்றில் லயித்து அமைதி பெற எண்ணுபவர் பலர்.  அமைதிக்காக போதை மருந்து(?) பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அமைதி ஒன்றும் அப்படி எளிதில் கிடைத்து விடுவதில்லையே! ஒருவேளை கிடைத்துவிட்டாலும் அது தற்காலிகமானதே!
அமைதியை தனிமனித அமைதி, சமூக அமைதி, இறைவனுடன் பெறும் அமைதி எனப் பிரிக்கலாம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; அமைதியற்ற மனிதன் அமைதியற்ற சமூகத்தை உருவாக்குகிறான்; அமைதியற்ற சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது.  பேராசை, பொறாமை, புகழ் வெறி, பதவி வெறி, ஆதிக்க உணர்வு உள்ள மனிதர்கள் தங்களது அமைதியையும் இழந்து விடுவதோடு சமூகத்தின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பதவி வெறி பிடித்த அரசியல்வாதியால் நாட்டின் அமைதி எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.    வறுமை, சாதி மத வெறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை முதலிய கொடுமைகள் நிரம்பிய சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது. சமூகம் தீமைகளால் சூழப்பட்டிருக்கின்ற போது அதில் வாழும் மனிதன் மட்டும் எப்படி அமைதியாக வாழ முடியும்?
சாதி வேண்டாம் என்று தனிமனிதன் கூறினாலும் சாதி அமைப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. சாதியை அவன் விட்டாலும் சாதி அவனை விடுவதாக இல்லை. சாதியைப் பொருட்படுத்தாது அவன் திருமணம் செய்ய விரும்பினால் சமூகம் அவன் மீது சாதியைத் திணிக்கிறது.
இலஞ்சம் வாங்குவதை ஒருவன் வெறுத்தாலும் இலஞ்சம் கொடுத்தே ஆக வேண்டிய நிலைமையில் இருக்கிறான்.
ஆபாசத்தை வெறுப்பவர்களும் ஆபாசமே ‘வாழ்க்கை முறை’ என்றாகி விட்ட சமூகத்தின் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை.
எனவே அமைதியை உருவாக்க விரும்புபவர்கள் இவ்விருவகை அமைதியின்மை பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவாக சமயவாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் தனிமனித அமைதி பற்றி மட்டுமே பேசுவார்கள். அவர்கள் தரும் தீர்வுகள் பிரார்த்தனை, வழிபாடு, தியானம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். ஆனால் சமயச்சார்பற்ற கொள்கையுடையவர்கள் சமூக, அறிவியல், பொருளாதார விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். தனிமனித ஒழுக்கம், அமைதி, சீர்திருத்தம் ஆகியவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தனிமனிதனும், சமூகமும் அமைதி பெறும் போதுதான் உண்மையான, முழுமையான அமைதி மலர முடியும்.
அமைதிக்கான வழிகளைக் காட்டுவதற்காகவே மனிதர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்து, அவர்கள் வாயிலாக அமைதிக்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் இறைவன் வழங்கினான். இத்தூதர்கள் இறைக்கோட்பாடுகளை மக்களுக்கு விளக்கியதோடு அமைதியை நிலை நாட்டும் பணியிலும் ஈடுபட்டனர். முதல் மனிதராகிய ஆதம் (அலை) முதல் இறைத்தூதர் ஆவார். அவரைத் தொடர்ந்து தூதர்கள் பலரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இறைவன் நியமித்தான். அந்த வகையில் இறுதியாகப் பணியாற்றியவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களாவார்.
இறைவனின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் சமுதாயமே அமைதி பெறும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, சமாதானம், சாந்தி, கீழ்ப்படிதல் என பல பொருள் உண்டு. இறைவனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும். இறைவழிகாட்டுதலை மீறினால் அமைதி மறுக்கப்படும் என்பதே அச்சொல் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
 ‘சாந்தி உண்டாகும் (இறைவனின்) நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு’ (குர் ஆன் 20 : 47) எனும் இறைவசனமும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.
 மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள். ஒரே ஆன்மாவிலிருந்து பிறந்தவர்கள். எனவே அனைவரும் சகோதரர்கள் எனும் இறைக்கருத்தை மறுத்து மனிதர்களை நாம் பல வர்ணங்களாகப் பிரித்தோம். அதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தோம். விளைவு சாதி இன மோதல்கள் !
 மதுவை தீமைகளின் பிறப்பிடம் என்கிறது இறைக்கோட்பாடு ! அதனை வருமானங்களின் பிறப்பிடம் எனக்கருதி அதனைத் திறந்துவிட்டோம். விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
வட்டி ஒரு சுரண்டல்; ஒரு கொடுமை என்ற இறைக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வட்டியின்றி பொருளியலே இயங்க முடியாது என்ற நிலையை உருவாக்கினோம். பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஏழைகளும், ஏழை நாடுகளும் சுரண்டப்படுதல், அடிமைப்படுத்தப்படுதல் போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றோம் !
‘மானக்கேடானவற்றிற்கு அருகில் கூட நெருங்காதீர்கள்’ என்ற இறைக் கோட்பாட்டை மீறியதால் ஏற்பட்ட விளைவுகள் விபச்சாரமும், கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், எய்ட்ஸ்…!
இப்படி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இறைச்சட்டங்களை மீறிய போதெல்லாம் மனித சமூகம் அமைதியை இழந்து விடுகின்றது. எனவே அமைதியைப் பெறுவதற்கான ஒரே வழி –
  “படைத்தவனின் பக்கம் திரும்புவதே !” (திருக்குர்ஆன் 94 :8)
  “இறைவனின் பக்கம் விரைந்து வருவதே !” (திருக்குர்ஆன் 51 :50)
இதோ "அவன்" பக்கம் திரும்ப ஒரு முழு மாதம் வந்துள்ளது.  இந்த ரம்ஜான் மாதம் முழுவதும் பகலில் உண்ணாமலும் பருகாமலும் இருந்து நம்மை "அவன்" நாடியபடி மாற்றிக்கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பம்.  இந்த மாதம் ஒருவனுக்கு கிடைத்து அதனைக்கொண்டு தன்னுடைய பாவங்களை விட்டு நீங்காதவன் நிச்சயமாக கைச்சேதாரம் அடைந்தவனாவான்!

வாருங்கள்! நம் அனைவர்மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
அமைதிக்குப் பெயர்தான் சாந்தி எனும் இஸ்லாம்!

3 comments:

  1. அன்பின் சைதை அஜீஸ் - குரானை அடிப் படையாக வைத்து - அதிலுள்ள நல்ல கருத்துகளை மையமாக வைத்து - அமைதி அடைவது எப்படி என்பதனை சைதை அஜீஸ் நன்கு விளக்கி உள்ளார். வருகிற ரமலான மாதத்தில் நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக - அதற்குத் தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கூறுகிறார்.

    இயன்றவர்கள் கடைப்பிடியுங்கள் - இனிய ரமலான் தின நல்வாழ்த்துகள் .

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  3. ஓ... சாந்தி என்றதும் நம்ம பக்கத்து வீட்டுப் புள்ளயச் சொல்றீங்களோன்னு நெனச்சு வந்துட்டேன். ஹி... ஹி....! சீரியஸ்னஸ் இல்லாம கமெண்ட் அடிக்கறேன்னு கோபிக்காதீங்கோ...! அமைதிக்கான விளக்கத்தைப் படிச்சதுல ரொம்ப சந்தோஷம்! புத்தன் வீட்டிலும் குண்டுகள் வெடிக்கின்றன என்ற வரி மிகப் பிடித்தது எனக்கு. இன்றைய நிலையில் தேவை உலகிற்கு சாந்தியும் சமாதானமும்தானே! வெகு நன்று!

    ReplyDelete