Thursday 18 December 2014

கதை சொல்கிறேன், கேளுங்க!

பொதுவாக ஒரு கதை சொல்லுவாங்க!

ஒரு ஊர்லே ஒரு ராஜா இருந்தானாம்.  அவன்மிகவும் கொடுங்கோலனாக ஆட்சி புரிந்துவந்தான்.  மக்கள் மீது அனைத்துவிதமான துயரங்களையும் செய்துக்கொண்டிருந்தான்.  ஒரு நாள் உடல்நிலைகுன்றி படுத்த படுக்கையாகி உயிர் பிரிகின்ற நேரத்தில் தன் மகனை அழைத்து அவனுக்கு பட்டம் சூட்டிவிட்டு “மகனே! என்னை இந்த நாட்டு மக்கள் நல்ல அரசன் என்று கூற வேண்டும்.  அப்படி நீ நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறி இறந்துவிடுகின்றான்.  புதிய அரசனாக தேர்வு பெற்ற மகன் யோசித்து ஒரு முடிவு செய்கிறான்.  “நாட்டில் தினமும் பத்து பேரை கொல்வது” என்பதே அவன் எடுத்த முடிவு.  சில நாட்களிலேயே மக்கள் அனைவரும் “இந்த ராஜாவுக்கு பழைய ராஜாவான இவனுடைய அப்பன் எவ்வளவோ நல்லவன்” என்று கூறலாயினர்.

இந்த கதையைதான் இன்று நடக்கும் மத்திய ஆட்சி நினைவுபடுத்துகிறது.  கடந்த தேர்த்தலில் பிரசாரம் செய்த பாஜக-வானது குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருக்கிறது.
மோடி பிரதமரானால் அந்த ஆறுகளெல்லாம் இந்தியா முழுவதும் ஓடச்செய்வோம்....
தாங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்கள்....
ந்த மதச்சார்பாகவும் குஜராத்தில் ஆட்சி செய்யவில்லை என்று கோர்ட் தீர்ப்பு வாயிலாகவும் ஊடகப் பிரசாரங்கள் மூலமும் உறுதியளித்தும் வாக்கு சேகரித்தனர்.  

மேலும் ஆட்சி அமைக்கும்பட்சத்தில் வெளிநாட்டிலிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வந்து, ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ பதினைந்து இலட்சங்களை தருவோம்!  ஆதார் அட்டை என்பது சுத்த மோசடி திட்டம்.  இதன் மூலம் ஒவ்வொரு இந்தியனின் தனிப்பட்ட விவரங்களை அமேரிக்கா சேகரிப்பதை தடுப்போம்!  டீசல் பெட்ரோல் விலையை கச்சா எண்ணெய் விலையை கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப குறைப்போம்!  கடந்த ஐமு ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது!  விலைவாசி உயர்ந்துவிட்ட்து!  தொழில் வளர்ச்சி இல்லை!  நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது! என்றெல்லாம் முழங்கி ஓட்டு வாங்கி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிட்டு, கடந்த ஆறு மாதங்களாக தங்களுக்கு ஓட்டளித்த மக்களே வெட்கி தலை குனியுமளவுக்கு நடந்து கொள்கின்றனர்.

   தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசியத்தலைவன் என்றது
·         காந்தி ஜெயந்தியன்று அனைவரும் அலுவலகத்திற்கு வந்து கக்கூஸ் கழுவவேண்டும் என்ற அறிவிப்பு
·         தாங்கள் ஆர் எஸ் எஸ்-சினால் வளர்க்கப்பட்டவர்கள் என்பதில் பெருமையடைகிறேன் என்று பாராளுமன்றத்திலேயே வெங்கையா நாயுடு மூலமாக அறிவிப்பு செய்வது
·         சமஸ்கிருதத்தை பள்ளிகளில் கட்டாயமாக்க நினைப்பது, ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பது
·         பகவத் கீதையை தேசிய நூலாக்க நினைப்பது
·         “ஈஷ்வர் அல்லாஹ் தேரோநாம்” என்று கூறிக்கொண்டே ஆதார் அட்டைக்காகவும் ரேஷன் கார்டுக்காகவும் கட்டாய மதமாற்றம் செய்வது 

·         தாஜ்மஹால் கோயிலிடத்தில் கட்டப்பட்டது என்று கூறி மற்றுமொரு “இடிப்பு” விழாவுக்கு(?) அச்சாரம் போடுவது
·         சுதந்திர இந்தியாவில் எந்த அரசும் யாருக்கும் காட்டாத ஒரு சலுகையை அதானிக்கு கொடுத்து, இந்தியப் பணத்தை ஆஸ்திரேலிய சுரங்கங்களில் கொட்டியது
·         கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு மாதங்களில் பேரல் 110 டாலரில் இருந்து 60 டாலராக, கிட்டத்தட்ட 40% குறைந்தும் பெட்ரோல் டீசல் விலையை வெறும் 10% அளவில் மட்டும் குறைத்துவிட்டு, அதன் கலால் வரியை உயர்த்தியது 

·         ஏப்ரல் 2015 முதல் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணை முழுவதுமாக நிறுத்தும் உத்தரவு பிறப்பித்தது
·         க்றிஸ்மஸுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ஒரு புது வெடியை கொளுத்திப்போட்டது
·         டிசம்பர் 25 அன்று 4000 கிறிஸ்துவர்களையும் 1000 முஸ்லிம்களையும் மதமாற்றம் செய்யப்போகிறோம் என்று அறிவித்தது
...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உங்களுக்கு ஓட்டளித்தவர்கள் ஏமாளிகளாகவே இருந்துவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்காதீர்கள்.  உங்களுக்கு அளிக்கப்பட்ட ஐந்து ஆண்டு அவகாசத்தில் முதல் ஆறு மாதங்களிலேயே
“பழைய ஆட்சியே எவ்வளவோ மேல்”
என்று மக்கள் எண்ண ஆரம்பித்துவிட்டனர் என்பதை இன்றைய ஆட்சியாளர்களே மறந்துவிடாதீர்கள்!!!


2 comments:

  1. யார் வந்தாலும் மக்களுக்கு ஏமாற்றம் தானா ?

    ReplyDelete