Wednesday 19 October 2016

பொது சிவில் சட்டம்





இந்திரா காந்தியின் கொலையாளிகளுக்கு ஆஜரானவர் - ராம்ஜெத்மலானி
ராஜிவ் காந்தியின் கொலையாளிகளுக்கு ஆஜரானவர் - ராம்ஜெத்மலானி
அஃப்ஸல் குருவுக்கு வாதாடியவர் - ராம்ஜெத்மலானி
செக்ஸ் சுவாமியார் ஆசாராம் பாபுவின் வழக்கரிஞர் - சுப்ரமண்யம் சுவாமி
வோடோஃபோன் வரி ஏய்ப்பு வழக்கில் ஆஜரானவர் - அருண் ஜெட்லீ
குஜராத்தில் நடந்த 500 கோடி வங்கி ஊழல் வழக்கில் ஆஜரானவர்-அருண் ஜெட்லீ
போபால் விஷ வாயு விபத்தில் வார்ரன் ஆண்டர்சன்-க்கு ஆஜரானவர் - அருண் ஜெட்லீ
IPL ஊழலில் சிக்கிய லலித் மோடிக்காக ஆஜரானவர் - வசுந்தரா ராஜேவின் கணவரும் மகளும்
சஹாரா நிருவன ஊழலில் சிக்கிய சுப்ரதோ ராய்க்காக ஆஜரானவர் - ரவி ஷங்கர் ப்ரசாத்

இப்படி சிவில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மிகவும் சரியாக பயன்படுத்தி கிரிமினல்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் சட்ட பாதுகாப்பு தரும் மேலே கூறப்பட்ட உதாரணங்களில் நாம் பார்ப்பது பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சியினர்கள்தான்.  இவர்கள்தான் இப்போது இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.

முதலில் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டிய  அவசியம் என்ன?
இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் யாரும் INDIAN PENAL CODE (இபிகோ) -வை ஏற்காதது போலவும் எனவே எல்லோருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று ஒரு தவறான கொள்கையை முன்மொழிந்து உள்ளனர்.  ஆனால் இது எந்தளவுக்கு நடைமுறையில் சாத்தியப்படும் என்பது புரியாத புதிராகவே இருக்கும்!

பொதுவாக இந்தியாவில் இருக்கும் முஸ்லீகள் அனைவரும் சிவில்/கிரிமினல் என எந்த வழக்காக இருந்தாலும் இபிகோ மூலமாகத்தான் நீதிமன்றங்களை நாடுகின்றனர் என்பது கண்கூடு.  ஆனால் அதே தங்களின் மத சம்பந்தமான பிரச்சனை/முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் அதற்கு முஸ்லீம்கள் தேர்வு செய்வது ஷரீயத் சட்டம்தான்.  ஷரீயத் என்றால் முஸ்லீம்களின் இஸ்லாமிய சட்டமுறையாகும்.  இதில் தாடி வளர்ப்பது, தலைக்கு தொப்பி அணிவது, புர்கா அணிவது, விவாகம்/விவாக ரத்து, சொத்து பிரித்தல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  முஸ்லீம்களுக்குள் நடக்கும் இந்த மாதிரியான முறண்பாடுகளுக்கு ஷரீயத் முறையிலேயே தீர்ப்பு கூறப்படும்.

ஆனால் இப்போது இதில் விவாகரத்து என்கின்ற ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முஸ்லீம் ஆண்கள் அனைவரும் விவாகரத்து செய்து முஸ்லீம் பெண்களை தவிக்க விட்டுவிடுவதாகவும் அதை தடுக்கவே இப்படி ஒரு பொது சிவில் சட்டம் கொண்டுவந்து அதனால் விவாகரத்தான முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனராம், இவர்கள்!

ஒரு சிறு புள்ளிவிவரத்தை பார்ப்போம்:
இந்தியாவில் வாழும் முஸ்லீம் மக்கள் தொகை = 170 மில்லியன்
50% திருமணமானவர்கள் எனில் = 85 மில்லியன்
விவாகரத்து விகிதம் = 0.5%
அதாவது கிட்டத்தட்ட 42,500 முஸ்லீம்கள்.
(இதில் பலருக்கு முத்தலாக் என்பதில் இணக்கமில்லை என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்)

இந்தியாவில் வாழும் இந்துக்கள் மக்கள் தொகை = 1 பில்லியன்
50% திருமணமானவர்கள் எனில் = 500 மில்லியன்
விவாகரத்தாகாமல் பிரிந்து வாழும் இந்துக்கள் விகிதம் 3.7%
அதாவது கிட்டத்தட்ட 18.5 மில்லியன் (இதில் இன்றைய பாரத பிரதமரும் இருக்கிறார்)

இப்போது கூறுங்கள்...
தவறான அணுகுமுறையாலும் தவறான சட்ட நுணுக்கங்களாலும் பாதிப்புக்குள்ளாகும் 18.5 மில்லியன் இந்துக்களுக்கு சட்ட மாற்றம் தேவையா அல்லது 42,500 முஸ்லீம்களுக்கு முதலில் சட்ட மாற்றம் தேவையா?

சரி, இப்போது தலாக் என்றால் என்னவென்று பார்ப்போம்.
விவாகம் என்றால் அரபி மொழியில் நிக்காஹ் என்பதாகும்!
விவாகரத்து என்றால் அரபி மொழியில் தலாக் என்பதாகும்!
அதாவது ஒரு மணமான ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்ய எண்ணினால் "உன்னை விவாகரத்து செய்கிறேன்" என்று கூறவேண்டும். அதாவது "உன்னை தலாக் செய்கிறேன்" என்று கூறவேண்டும்.  இதைதானே இன்றைய சட்டமும் முதலில் நோட்டீஸ் கொடுக்கவேண்டும் என்று கூறுகிறது! பிறகு விசாரித்து சிறிது கால அவகாசம் கொடுத்து சேர்த்து வைக்க முற்பட்டு, பின்னர் முடியவில்லை என்றால் அவர்களின் விவாகத்தை ரத்து செய்கிறது சட்டம்.  அதேபோலத்தான் தலாக் என்பதும்.  முதலில் ஒரு முறை கூறிவிட்டு பிறகு நிக்காஹ்-வில்(விவாகத்தின் போது) சாட்சிகளாக இருந்தவர்கள் அல்லது மற்ற சாட்சிகள் முன்னிலையில் விசாரணை செய்து மறுமுறையும் மணவாழ்க்கை பிடிக்கவில்லையெனில் மீண்டுமொருமுறை தலாக் கூறவேண்டும்.  பின்னரும் சில காலங்கள் கழித்து கடைசியாக ஒரு வாய்ப்பாக மூன்றாவது முறையும் தலாக் கூறினால்தான் விவாகரத்து கிடைக்கும்.
இப்போது ஒரு கேள்வி வரும்.  அதாவது இஸ்லாம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பதாகுமே!  ஆண் விரும்பினால் தலாக் கூறி விவாகரத்து செய்துகொள்வது போல, பெண் நினைத்தால் முடியுமா? முடியும். அதற்கு பெயர் குலாஹ்.  ஒரு பெண் இந்த கணவனுடன் தான் வாழ விரும்பவில்லை என்றால் குலாஹ் சொல்லி பிரிந்துவிடலாம்.  அதற்கும் அதே வழிமுறைதான்.


சரி.... பொது சிவில் சட்டம் என்கின்றோமே...



இதை ஜெய்ன மதம் ஏற்றுக்கொள்ளுமா? அவர்களின் சாமியார்கள் எந்தவிதமான துணியையும் அணியாமல் சுற்றித்திரிகின்றனரே! அம்மணமாக திரிவது இபிகோ-வின்படி குற்றமாச்சே!  அவர்களை தண்டிக்க முடியுமா?  இது அவர்களின் மத அடிப்படை உரிமையாக உள்ளது.







சீக்கியர்கள் டர்பண் அணிந்துகொண்டு கையில் கத்தியை வைத்துக்கொள்வதை இந்த பொது சிவில் சட்டம் நீக்குமா?  சீக்கியர்களின் மத உரிமையாக இது உள்ளதை மறக்கலாமா?



HUF (ஹிந்து அண்டிவைடட் ஃபாமிலி) ACT-ஐ நீக்கமுடியுமா இந்த பொது சிவில் சட்டத்தால்? இதனால் இந்திய அரசாங்கத்திற்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை அறிவீர்களா?பொது சிவில் சட்டப்படி இந்த உரிமையை ஹிந்து மதவாதிகள் விட்டுக்கொடுப்பார்களா?

தாழ்தப்பட்ட பிரிவினர்களை பார்த்து நாம் அவர்களின் ஜாதியை கூறினாலும் நம்மை கைது செய்ய ஒரு சட்டம் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையாக கொடுக்கப்பட்டுள்ளதே, இதை நீக்கிவிடுவார்களா இந்த பொது சிவில் சட்டம் அமைக்க விரும்பும் இவர்கள்?

இப்படி பல்வேறு வேற்றுமைகளை கொண்ட நம் பாரத திருநாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்பது யானை தன் தலையில் மண்ணை தெளித்துக்கொள்ளும் விதமாக ஆகிவிடும் என்பதே என் கருத்து!

கடைசியாக நம் முஸ்லீம் சகோதரர்களுக்கு!
நாம் கலையிலும் மாலையிலும் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வரும்போது எத்தனை மாற்று மதத்தினர் வந்து நின்று தங்களுக்கு "ஊத" சொல்லி அதனால் தங்களுக்கு ஏற்பட்ட குறை/நோய் குணமடைவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் ஒருவரேனும் ஒரு முஸ்லீம் வீட்டிற்கோ அல்லது கடைக்கோ வந்து நீங்கள் "ஊதுங்கள்"... எனக்கு குணமாகட்டும் என்று கூறுவதில்லையே ஏன் என்று சற்று சிந்தித்து பார்த்தீர்களா?  நாம் தொழும்போது மட்டுமே முஸ்லீமாக இருக்கின்றோம்.  மற்ற நேரத்தில்... அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.
போதை வஸ்துகளுக்கு ஆளாகியுள்ளோம்!
திருமணம் என்றால் வரதட்சணை பெற்று வீண் விரயமாக செலவு செய்வது!
பிள்ளைகளுக்கு மார்க்க அறிவு போதிக்கப்படுவதில்லை!
சகோதர/சகோதரி பசியாக இருக்கும் பட்சத்தில் நாம் விருந்துண்கிறோம்!
இப்படி பல குறைகளை நம்மிடமே வைத்துக்கொண்டு, நாமே ஷரீயத்தை பின்பற்றாமல் இருந்துகொண்டு நம் அரசை குறைகூற நமக்கு என்ன அருகதை உள்ளது?  சற்று சிந்தித்துப்பாருங்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

வாருங்கள் நாம் ஒன்றுபட்டு இந்த அநியாயக்காரர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம்!  தேவையில்லை எங்களுக்கு பொது சிவில் சட்டம்.



Sunday 2 October 2016

பத்தாம் நாள்... THE TENTH DAY... யவ்மே ஆஷுரா!

அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வபர்காதஹூ



ஹிஜ்ரி 1437 முடிந்து புத்தாண்டு 1438 பிறந்துள்ளது.  இந்த புத்தாண்டில் இருந்து, இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)  சில பதிவுகள் நம் மார்கம் சம்பந்தமாக பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன்.  அதன் ஆரம்பமாக புத்தாண்டின் முதல் மாதமாகிய மொஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளின் சிறப்பை இங்கே தருகிறேன்.  இதில் ஏதேனும் தவறுகள் அல்லது குறைகள் இருப்பின் தயைகூர்ந்து நண்பர்கள் எடுத்து கூறினீர்களேயானால் அதை நிவர்த்தி செய்துகொள்வேன்.  அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

ஒவ்வொரு இனம் மற்றும் மதத்திற்கும் நாட்காட்டிகள் இருக்கின்றன. அதேபோல இஸ்லாம் மார்க்கத்தின் நாட்காட்டியானது மொஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் மக்காவை துறந்து மதினாவிற்கு பயணமான ஹிஜ்ரத்தில் ஆரம்பமாகிறது.  எனவே இஸ்லாமியர்களின் நாட்காட்டிக்கு ஹிஜ்ரி ஆண்டு என்று கூறப்படுகிறது.  இஸ்லாமியர்களாகிய நாம் மாதங்களை சந்திரனை கொண்டு கணக்கிடுகின்றோம்.  எனவே பன்னிரண்டு மாதங்கள் கொண்ட ஆண்டிற்கு கிட்டத்தட்ட 355 நாட்களே!

இதன் முதல் மாதம் மொஹர்ரம்   2) ஸஃபர்    3) ரபியுல் அவ்வல்
4) ரபியுல் தானி     5) ஜமாத்துல் அவ்வல்       6) ஜமாத்துல் தானி    7) ரஜப்               8) ஷா'பான்    9) ரமதான்  10) ஷவ்வால்  11) துல் காயிதா  12) துல் ஹஜ்



மொஹர்ரம் என்ற அரபி வார்த்தையின் அர்த்தம் "தடை செய்யப்பட்டது" (FORBIDDEN) என்பதாகும்.  இந்த மாதத்தில் சண்டைகளிட்டுக்கொள்ள தடைசெய்யப்பட்டிருக்கிறது!  மேலும் இம்மாதத்தின் 10-ஆம் நாளானது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.  எம்பெருமானார் ரசூலேகரீம் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் மதீனா சென்றபோது, அங்கிருந்த யூதர்கள் மொஹர்ரம் 10-ஆம் நாள் உண்ணா நோன்பு வைத்திருந்தனர். அவர்களிடம் நோன்பு வைப்பதற்கான காரணத்தை கேட்டபோது யூதர்கள், "எங்கள் தூதர் மோஸஸ் (மூசா அலைஹ் வஸலாம்) மற்றும் அவரின் கூட்டத்தார்கள் கொடுங்கோலனாகிய பாரோ(ஃபிர்அவ்ன்) மன்னனிடமிருந்து காக்கப்பட்டார்கள்.  எனவே அந்த புனித நாளை நினைவு கூற நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்றனர்.  இதை கேட்ட எம்பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் "உங்களை விட நாங்கள் தான் மூஸா அலைஹ் வஸலாம்-க்கு நெருங்கியவர்கள்.  எனவே நாங்கள் இரண்டு தினங்கள் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள்.  எனவே மொஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் அல்லது 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்பது நபி வழியாகும் (ஸுன்னத்)



பொதுவாக நாம் மொஹர்ரம் 10-ஆம் நாளை துக்க நாளாக புரிந்து வைத்துள்ளோம்.  ஆனால் இந்த ஆஷூரா நாளானது மிகவும் சிறப்பிக்கபட்ட நாளாகும்.  இந்த நாளில் தான் உலகில் படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம் (ADAM) அலைஹ் வஸலாம் அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டது!  நூஹ் (NOAH) அலைஹ் வஸலாம் அவர்கள் வெள்ளப் பிரளயத்திலிருந்து தப்பிக்க அல்லாஹ்வின் ஆணைபடி தான் நிர்மாணித்த கப்பலில் ஏறி பயணித்தபோது அல்லாஹ்வால் காப்பாற்றப்பட்டதும் இதே ஆஷூராவன்றுதான்.  இப்ராஹீம் (ABRAHAM) அலைஹ் வஸலாம் அவர்கள் நம்ரூத் அரசனால் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு குண்டத்தில் வீசியெறிந்த போது அவரை அல்லாஹ் காப்பாற்றியதும் அதே நன்னாளில்தான்!

மூசா அலைஹ் வஸலாம் அவர்களோடு அல்லாஹ் தூர்ஸினா மலையில் நேரடியாக பேசி தவ்ராத் வேதத்தை அருளியதும் (10 COMMANDMENTS) இதே மொஹர்ரம் பத்தாம் நாளில் தான்!  கொடிய நோயில் உழன்றுகொண்டிருந்த அய்யூப் அலைஹ் வஸலாம் அவர்கள் நோய் குணமடைந்ததும் இதே நன்னாளில்தான்!  யூஸூஃப் (JOSEPH) அலைஹ் வஸலாம் பிரிந்த பின் தன் தந்தையாகிய யாகூப் அலைஹ் வஸலாம் அவர்களோடு இணைந்ததும் இதே நன்னாளில்தான்!  மீன் வயிற்றில் வாழ்ந்த யூனூஸ் அலைஹ் வஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வேளியேற்றப்பட்ட தினமும் இதே பத்தாம் நாள்தான்!  ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு மூஸா  (MOSAS) அலைஹ் வஸலாம் மற்றும் அவரின் கூட்டத்தார்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டதும் அன்றைய தினம்தான்!

தாவூத் (DAVID) அலைஹ் வஸலாமின் பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ள பட்டதும், சுலைமான் (SOLOMON) அலைஹ் வஸலாமின் அரசாட்சி மீண்டும் அவருக்கே திருப்பியளிக்கப்பட்டதும், ஈஸா (JESUS) அலைஹ் வஸலாம் அவர்கள் வானத்தில் உயர்த்திக்கொள்ளப்பட்ட தினமும் இதே ஆஷூரா அன்றுதான்!  

மேலும் எம்பெருமான் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் அவர்களின் பேரன் ஹஜரத் ஹுசைன் ரலியல்லாஹ்ஹூ அன்ஹூ அவர்கள் எதிரிகளால் ஷஹீத் ஆக்கப்பட்டதும் இதே மொஹர்ரம் மாதம் பத்தாம் நாள்தான். மேலும் உலகம் படைக்கப்பட்டதும் அழிக்கப்படப்போவதும் யவ்மே ஆஷூரா எனும் இதே நாளில்தான் என்பதனையும் நாம் நினைவில் கொள்வோம்.



இப்படி பல்வேறுபட்ட சிறப்புகள் நிறைந்த "யவ்மே ஆஷூரா" என்கின்ற மொஹர்ரம் மாதம் பத்தாம் நாளை நாம் சிறப்பிக்கவேண்டியது நம் கடமையாக உள்ளது.  மேலும் மொஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் ஸுன்னத்தான நோம்பு நோற்று அந்நாளை சிறப்பிப்போம்.